/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghjk_9.jpg)
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்கியூஎம் கட்சி கடந்த வாரம் திடீரென வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்கியூஎம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்தது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் எதிக்கட்சிகள் பிரதமர் இம்ரான் கானை ராஜினாமா செய்யக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தான் ஒருபோதும் அத்தகைய முடிவை எடுக்கமாட்டேன் என்று அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆட்சியை கலைத்துள்ளார். மேலும் மூன்று மாதத்தில் தேர்தல் நடத்தவும் அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை இல்லாததால் இம்ரான் கான் ஆட்சியை இழப்பார் என கருதப்பட்ட நிலையில், அவரே ஆட்சியை கலைக்கக்கூறி தேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் மக்களின் ஆதரவை பெறலாம் என்ற நம்பிக்கையில் அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)