தென் கொரியாவில் திடீர் அவசரநிலை பிரகடனம்; சில மணி நேரங்களிலே நடந்த ட்விஸ்ட்!

Sudden Emergency Declaration in South Korea

தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் நேற்று (03-12-24) இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்படாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு அதிபர், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

தென் கொரியா அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தென் கொரியாவின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இராணுவச் சட்டத்தை திணிப்பதை எதிர்த்து பாராளுமன்றத்தை மீற முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், நாடு முழுவதும் பதற்ற நிலை உருவானது.

தென் கொரியாவில் திடீர் அவசரநிலை பிரகடனம்; சில மணி நேரங்களிலே நடந்த ட்விஸ்ட்!

இந்த அவசரநிலை ராணுவ சட்டம் அறிவிப்புக்குப் பிறகு, நாடாளுமன்றம் கூடியது. அப்போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 190 பேர் ஒருமனதாக இராணுவச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 300 உறுப்பினர்களில் 190 உறுப்பினர்கள், இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததால், அதிக ஓட்டுகள் பெற்றதினால், இந்த சட்டம் செல்லாது என்று கூறி சபாநாயகர் வூ வொன் ஷிக், இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இன்று அதிகாலை, இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது. சர்ச்சைக்குரிய முடிவை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி யூன் அறிவித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டாடினர். இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பியது.

இராணுவ சட்ட விதிகளின் கீழ், அரசியல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும். வாரண்ட்கள் இல்லாமல் கைது செய்யப்படலாம், மேலும் கருத்து வேறுபாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, இதில் போலி செய்தி மற்றும் பொதுக் கருத்தை கையாளுதல் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டது. கடந்த 1980ஆம் ஆண்டு மாணவர்களும் தொழில் சங்கங்களும் நடத்திய போராட்டத்தின் போது அவசரநிலை ராணுவச் சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

emergency Military
இதையும் படியுங்கள்
Subscribe