Skip to main content

வீட்டு சிறையில் பிரதமர்... அமைச்சர்களும் கைது - இராணுவத்தின் நடவடிக்கையால் சூடானில் பரபரப்பு!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

SUDAN

 

சூடான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில், சூடான் அதிபருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. அன்றாட செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளால் வெடித்த இந்தப் போராட்டத்தையடுத்து, 2019ஆம் ஆண்டு அந்தநாட்டில் அல்-பஷீர் என்பவர் தலைமையில் நடந்து வந்த ஆட்சியை கவிழ்த்து, சூடான் இராணுவம் மூன்று மாதம் அவசர நிலையை அறிவித்தது.

 

இதன்பின்னர் சூடானில் இராணுவமும், ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய மக்கள் குழுக்களும் இணைந்து இடைக்கால அரசை நடத்துவது என்றும், இரண்டு வருட அரசியல் நிலை மாற்ற காலத்திற்குப் பிறகு தேர்தலை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவமும் மக்கள் குழுக்களும் இணைந்து ஆட்சி நடத்திவந்தன.

 

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இடைக்கால அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்றன. இராணுவத்தில் உள்ள அல்-பஷீரின் விசுவாசிகள் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் இடைக்கால அரசில் விரிசலை ஏற்படுத்தின.

 

இந்தநிலையில், இன்று (25.10.2021) பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை சூடான் இராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. தொழில்துறை அமைச்சர் இப்ராகிம் அல்-ஷேக், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹம்சா பலூல் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பைசல் முகமது சாலே உள்ளிட்டோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். சூடானின் தலைநகருக்குச் செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சூடான் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

amazon forest flight incident four child recover safety

 

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.