மக்களிடம் மன்னிப்புக் கேட்டு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே!

Sri Lankan Minister Roshan Ranasinghe has apologized to the people and resigned!

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்ஷே சகோதரர்கள் அரசியலில் இருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவ வாகனம் எரிப்பு போன்ற உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கோத்தபய அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மே 1- ஆம் தேதியில் இருந்து பதவி விலகுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவின் திடீர் பதவி விலகல், இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe