Skip to main content

மக்களிடம் மன்னிப்புக் கேட்டு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

Sri Lankan Minister Roshan Ranasinghe has apologized to the people and resigned!

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால்,  மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்ஷே சகோதரர்கள் அரசியலில் இருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ராணுவ வாகனம் எரிப்பு போன்ற உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கோத்தபய அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பிரகடனப்படுத்தியுள்ளார். 

 

இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அனுப்பியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மே 1- ஆம் தேதியில் இருந்து பதவி விலகுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவின் திடீர் பதவி விலகல், இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.