Skip to main content

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை அரங்கேற்றிய இலங்கை சகோதரர்கள்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை அன்று அடுத்தடுத்த 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் சில இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியானது. இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து இலங்கை போலீஸார் சுமார் 25 பேரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 

 

srilanka brothersஇந்த விசாரணையில் இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தப்பட்ட தீவிரவாதிகளின் வீட்டிற்கு சென்றனர். அப்போது இல்ஹாம் (36) , இன்சாப் (38)  இவர்கள் இருவரும் இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதை இலங்கை போலீஸார் உறுதிப்படுத்தினர். இந்த இரு சகோதர்களும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் மகன்கள் ஆவர். ஆனால் இவர்கள் ஏன் தீவிரவாத இயக்கத்திற்கு சென்றனர் என்ற விசாரணையை இலங்கை காவல்துறை முழு வீச்சில் ஈடுப்பட்டுள்ளது. அதே சமயம் இலங்கை கொழும்புவில் ஷாங்கரி - லா நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் இல்ஹாம் என்பதும் , சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தியது இன்சாப் என்பதும் இலங்கை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் விசாரணைக்காக இல்ஹாம் வீட்டிற்கு சென்ற போலீஸார் கர்ப்பிணியான இல்ஹாமின் மனைவி பாத்திமாவிடம் விசாரணை  நடத்திய போது அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார். அதில் அவருடைய இரு குழந்தைகள் மற்றும் மூன்று போலீஸார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவி வருவதாக அந்நாட்டு அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனையில் இலங்கை ராணுவம் ஈடுப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய அக்கா

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
sister asked collector to return body of her brother who passed away in Malaysia

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (39). இவர் எலக்ட்ரீசியன் வேலை தேடி மலேசியா சென்ற நிலையில் அங்கு இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த உயிரிழந்த அணு தேவராஜன் சகோதரி விக்டோரியா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி விழுந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

“எப்படியாவது எனது தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்..” எனக் கோரிக்கை வைத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர். இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

Next Story

“இலங்கை அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Ramadoss condemns  filing of a  case against 10 Tamil Nadu fishermen

தமிழக மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள்  என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23 ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.

அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரை அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் நடந்த சண்டையில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல்,  இந்தியாவுக்கான இலங்கை தூதர் சேனுகா செனவிரத்னே தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை  சந்தித்து இலங்கை கடற்படை வீரர் கொல்லப்பட்டது குறித்து சிங்கள அரசின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு கடுமையாக தண்டனையை  பெற்றுத்தருவதன் தொடக்கமாகவே இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் தெரிகின்றன.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை  கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.

அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார்.  இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும்,   கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800&க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிங்கள வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வங்கக் கடலில் எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.