நிதி நெருக்கடியால் திணறும் இலங்கை!

Sri Lanka suffocated by financial crisis!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் காகித இருப்பு இல்லாத காரணத்தால், பள்ளித் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

வரும் திங்கள்கிழமை முதல் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சடிப்பதற்கு தேவையான காகிதம் மற்றும் மையை இறக்குமதிசெய்ய தேவையான அந்நிய செலவாணி இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்ததற்கு பிறகு மிக மோசமான நிதி நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தாண்டு கடன்களை அடைக்க, இலங்கை சுமார் 6.9 பில்லியன் டாலர்கள் தேவை. ஆனால், அந்த நாட்டின் வசம் பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, 2.3 பில்லியன் டாலர் அளவே, அந்நிய செலாவணி கைவசம் இருந்தது.

இலங்கையில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் உதவி அளிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிதியத்திடமும் இலங்கை நிதியுதவியைக் கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மண்ணெணெய் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு வாரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அங்குள்ள கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe