Skip to main content

'சிங்கிள்' யானையின் விமானப் பயணம்... கம்போடியாவுக்குப் பறக்கும் 'காவன்'!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 Single Elephant Flight ... ''kaavan'' Flying to Cambodia

 

விலங்கியல் ஆர்வலர்கள், குறிப்பாக யானை பிரியர்களுக்கும் அவ்வளவு எளிதில் மறந்துவிடாத பெயர் 'காவன்' யானை. தனிமையின் வலியால் சுவற்றை முட்டி மோதி நிற்கும் காவனின் புகைப்படம் மிகப் பிரபலம். 

 

யார்தான் அந்த காவன்... 1985-ஆம் ஆண்டு யானையே இல்லாத சூழலில், ஒரு யானையை வளர்க்க முன்வந்த பாகிஸ்தான், ஒரு வயதுடைய யானையை இலங்கையிலிருந்து வாங்கியது. பாகிஸ்தானிற்கு வந்த அந்த யானைக்கு, 'காவன்' எனப் பெயர் சூட்டப்பட்டு, இஸ்லாமாபாத் மிருகக் காட்சி சாலையில் விடப்பட்டிருந்தது. 

 

 Single Elephant Flight ... ''kaavan'' Flying to Cambodia

 

ஒரு வயதிலிருந்து அங்கேயே வளர்ந்த காவனுக்குத் துணையாக இலங்கையில் இருந்து 1990 -ஆம் ஆண்டு, 'ஷகவுளி' என்ற பெண் யானை கொண்டு வரப்பட்டது. இவ்வளவு நாள் தனியாக இருந்த காவனுக்கு, புது ஜோடி கிடைத்த சந்தோஷத்தில் இரண்டு யானைகளும் மகிழ்ச்சியாக வளர்ந்து வந்தது. ஆனால், பாகிஸ்தானின் தட்ப வெட்பநிலை யானைகளுக்குச் சிக்கலாக முடிந்தது. சில வருடத்திலேயே 'ஷகவுளி' உயிரிழந்த நிலையில், ஷகவுளியின் மறைவுக்குப் பிறகு 'காவன்' தனிமையிலேயே வாடியது. அதனுடைய கொட்டகையை விட்டு அதிகம் வெளிவராத காவன், தனிமையின் சோகத்தால் தலையைச் சுவற்றில் முட்டி சோகமாக நிற்கும். அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமான ஒன்று. அவ்வப்போது 'காவன்' மூர்க்கத் தனத்தையும் வெளிப்படுத்தியது. சில நேரங்களில் மதம் பிடித்தது போல நடந்து கொள்ளும். 

 

 Single Elephant Flight ... ''kaavan'' Flying to Cambodia

 

காவனின் தனிமையை உணர்ந்த தன்னார்வலர்களும், விலங்கியல் ஆர்வலர்களும் காவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். 'காவன்' வாழ்வதற்கான சூழ்நிலைகளைக் கொண்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதேபோல், அதற்கு ஒரு துணையாவது ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த வலியுறுத்தல் வழக்காகவே மாறியது. வழக்கில் நீதிபதிகள் காவனை வளர்வதற்கு ஏற்ற சரணாலயத்திற்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், கம்போடியாவில் உள்ள சரணாலயம் ஒன்றிற்குக் காவன் யானை செல்லவுள்ளது. தற்பொழுது, 35 வயதுடைய காவனை, மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்க உள்ளனர் விலங்கியல் ஆர்வலர்கள். விமானத்தின் மூலம் பிரத்தியேகமாகக் கூண்டு மூலமாக, காவன் யானை கம்போடியாவுக்குப் பறக்க உள்ளது.

 

 Single Elephant Flight ... ''kaavan'' Flying to Cambodia


அதற்கான பயிற்சிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் காவனுக்குச் செய்து வருகின்றனர். மறுபுறம், காவனின் பிரியர்கள், அதற்குப் பிரியாவிடையை அளிக்க தினமும் 'சென்ட் ஆஃப்' நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றனர். வரும் நவம்பர் 29 -ஆம் தேதி விமானம் மூலம் கம்போடியா செல்ல இருக்கிறது, இந்த 'சிங்கிள்' யானை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.