Skip to main content

சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடித்த மக்கள் செயல் கட்சி...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

singapore election results

 

சிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் இன்னும் 10 மாதங்களில் முடிவடையும் நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் லீ. கரோனா வைரஸுக்கு மத்தியில் நேற்று நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு முகக் கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், வாக்களிக்கக் கூடுதலாக இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று மாலை தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதில், மக்கள் செயல் கட்சி, போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சி. சிங்கப்பூரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கப்பூர் போல் தமிழகத்தின் துறைமுகங்களை மாற்றும் முயற்சி; சிங்கப்பூரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று துறைமுகங்கள் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.

 

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருகை தந்து இங்குள்ள துறைமுகங்கள் குறித்து பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தது. அதன் அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் சிங்கப்பூர் சென்றனர்.

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் அமைச்சரை வரவேற்றார். அதிகாரிகளுடன் சிங்கப்பூர் துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக பிரதிநிதி அனைத்தும் சுற்றிக்காண்பித்து அதுகுறித்த தகவல்களை அமைச்சரிடம் தெரிவித்தார். அதன்படி, பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில் சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம் துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

2023 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இறங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டங்களை கையாளும் திறன் கொண்டது என்று  அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

 

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையே அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டின் கடற்கரையில் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் துறைமுக பிரநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

அமைச்சர் சிங்கப்பூர் சென்றதும் திமுக அயலக அணியின் சிங்கப்பூர் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

 

 

Next Story

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு நிதி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்கள்! - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Singaporean businessman who funded Tamilnadu government school

 

தமிழக இளைஞர்கள் பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்த பிறகு வேலைக்காக வெளிநாடு சென்று சம்பாதித்து வருகின்றனர். இதில் சிங்கப்பூரில் அதிகமான தமிழக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். படிப்பை முடித்ததும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் திருமணங்களுக்காகச் சொந்த ஊர் வரும்போது பல நிறுவனங்கள் வாழ்த்தி கல்யாணப் பரிசுகளும் வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.

 

சமீப காலமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞர்களின் நிறுவன முதலாளிகள், மேலாளர்கள் பிளைட்டில் பறந்து வந்து நேரில் மணமக்களை வாழ்த்திச் செல்கின்றனர். கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் நிறுவன முதலாளி, மணமக்களை வாழ்த்தி கல்யாணப் பரிசு வழங்கியதுடன் அப்பகுதி அரசுப் பள்ளிகளுக்கு கணினி பொருட்கள் வாங்க நிதி வழங்கிச் சென்றார்.

 

அதேபோல ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருக்காக்குறிச்சி செல்வம் சகோதரர்கள் திருமணத்திற்கு, சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கால்லின், நிறுவன திட்ட இயக்குநர் ஹம்மிங்க், திட்ட மேலாளர் டிம் ஆகியோர் நேரில் வந்தனர். அவர்களைச் செண்டை மேளம் முழங்க பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து மரியாதை செய்தனர். தமிழ்நாடு கலாச்சாரத்தைப் பார்த்து வியந்த சிங்கப்பூர்க்காரர்கள் ‘ஐ லவ் இந்தியா’ என்று கூறி மகிழ்ந்தனர்.

 

Singaporean businessman who funded Tamilnadu government school

 

அடுத்த நாள் தனது நிறுவன ஊழியர் செல்வம் படித்த கருக்காக்குறிச்சி அரசுப் பள்ளிக்கு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த நிதி வழங்க வருவதை அறிந்த கிராம மக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் உடனேயே ரூ. 1 லட்சம் நிதி வழங்கியதோடு மேலும் நிதி வழங்கத் தயாராக உள்ளோம் என்றனர்.

 

இதனைப் பார்த்த கிராம மக்கள், ‘எங்கிருந்தோ வந்து எங்க குழந்தைகளின் கல்விக்காக; எங்க ஊரு அரசுப் பள்ளிக் கூடத்தை வளமாக்க நிதி தந்த தொழிலதிபர்களை பாராட்டுகிறோம். இதுபோன்றவர்களால் கிராமத்து ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தொழில்நுட்ப வளர்ச்சியடைவதை பெருமையாகப் பார்க்கிறோம்’ என்கின்றனர்.