Skip to main content

பதற்றத்தில் மாநிலம்; பதக்கம் வென்ற மணிப்பூர் வீரர்!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

silver medalist Roshibina Devi says Dedicated to the people of Manipur

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், 6வது நாளான இன்று, வுஷூ விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

 

வுஷூ விளையாட்டின் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக மணிப்பூரைச் சேர்ந்த ரோஷிபினா தேவி பங்கேற்று விளையாடினார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷூ மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார். இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியதால் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரோஷிபினா தேவி, “வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. இந்த போட்டியில் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். இந்த ஆட்டத்தில் நான் செய்த தவறுகளை சரி செய்துகொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவேன். நான் பெற்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தியபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், ஏராளமான பொருட்கள் சேதமடைந்து, 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த மாநிலத்தில் இருந்து ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட ரோஷிபினா தேவி  வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

45 நிமிடங்கள் வெடித்து சிதறிய துப்பாக்கி குண்டுகள்! மணிப்பூரில் சோகம்!

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

21 year young man passes away in manipur
கோப்புப் படம் 

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. 

 

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. 

 

இந்த நிலையில் இன்று (25ம் தேதி) காலை மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஜூபி எனும் பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 21 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மெய்தீய் மக்கள் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் ஜூபி எனும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. அதிகாலை சுமார் 2.45 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச் சூடு அதிகாலை 3.30 வரை நடந்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். 

 

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். 

 

 

 

Next Story

மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Central government bans 4 organizations in Manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதே சமயம், அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்று கூறி மணிப்பூரை சேர்ந்த 4 மைத்தேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் (PLA) என்ற அமைப்பும், அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) ஆகிய 4 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மைத்தேயி மக்கள் குழுவுக்கு ஆதரவாக உள்ளதாக குக்கி தரப்பினர் புகார் கூறிய நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.