சைபீரியாவில் உள்ளது கிமிரோவோ நகரம். இங்குள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் நேற்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. முதலில் தியேட்டர் உள்ள தளத்தில் பற்றிய தீ, ட்ராம்போலின் எனப்படும் குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு வேகமாக பரவியது. கரும்புகையுடன் எரிந்த தீயில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் உதவியுடன் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் காலை வரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. சுமார் 100 பேருக்கு மேல் உயிரிழப்புகள் இருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் நெருக்கமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக வளாகத்தினும் வளர்ப்புப் பிராணிகளுக்கான சரணாலயம் இருப்பதால், கரும்புகை காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை இந்த விபத்துக்கான சரியான காரணங்கள் வெளியாகவில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.