scotland passes the Period Products Bill

Advertisment

பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து சுகாதார தயாரிப்புகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை ஸ்காட்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களுக்குத் தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் மசோதாவை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான மோனிகா லெனான் முன்மொழிந்தார். பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பொன் போன்ற தயாரிப்புகளை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெயரை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது.

இந்த மசோதாவின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், "தேவைப்படும் அனைவருக்கும் சுகாதார தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து இருக்கும். மாதவிடாயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.