Skip to main content

ஆடை விஷயத்தில் மீண்டும் கெடுபிடி காட்டும் சவுதி அரசு... சுற்றுலா பயணிகள் குழப்பம்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் கவனத்தை எண்ணெய் உற்பத்தியிலிருந்து சுற்றுலாத்துறை நோக்கியும் சமீபகாலமாக திருப்பி வருகின்றன.

 

saudi releases new rules on dress codes to tourists

 

 

ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது சவுதி அரசும் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க இருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சுற்றுலா விசாவை ஆன்லைன் மூலமாக பெற முடியும் எனவும், வெளிநாட்டு பெண்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் இனி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது பல வெளிநாட்டினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சவுதி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியாவிட்டால், சுற்றுலாவரும் பெண்கள் தங்கள் தோள்பட்டை, முழங்கால் போன்ற உடல் பாகங்கள் வெளியில் தெரியாத வகையில்தான் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண், பெண் இருவருமே இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது.  மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை எடுப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது,  பிரார்த்தனை நேரங்களில் தேவையற்ற சத்தங்கள் எழுப்புவது உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது என்பது உட்பட 19 விதிமுறைகள் இந்த பட்டியலில் இருக்கிறது. இவற்றை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த புதிய அறிவிப்பு அந்நாட்டிற்கு வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகளை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.