Skip to main content

கரோனாவுக்கு மத்தியில் எளிமையாக திருமணத்தை முடித்த உலகின் இளம் வயது பிரதமர்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

sanna marin marries his long time boyfriend

 

 

உலகின் இளம்வயது பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அண்மையில் நடைபெற்ற திருமணத்தில் தனது காதலரை கரம் பிடித்துள்ளார். 

 

34 வயதாகும் சன்னா மரின், கடந்த ஆண்டு பின்லாந்து நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையோடு தனது ஆட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்திய விதத்தில் உலக நாடுகளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அதிகாரம் மற்றும் அனுபவம் மிக்க பல தலைவர்கள் தங்கள் நாடுகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திணறிவரும் சூழலில், சன்னா மரினின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. அவரது அரசின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டில் மொத்த பாதிப்பே 10,000 -க்கு கீழ் பதிவானது.

 

இதன்மூலம் அரசியல் சிறந்த தலைவராக பெயர்பெற்றுள்ள அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நீண்டநாள் காதலரான மார்க்கஸைத் திருமணம் செய்துள்ளார். 16 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், 40 விருந்தினர்களுக்கு மத்தியில் மிக எளிமையாக தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம். ஒன்றாக வளர்ந்து அன்பு மகளுக்கு பெற்றோராகிவிட்டோம். நான் விரும்பும் மனிதனுடன் என் வாழ்க்கையை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் - பின்லாந்து, சுவீடனை எச்சரித்த ரஷ்யா!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

putin

 

ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

இதற்கிடையே உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப புதின் தயார் என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிகாரிகளை போதைப்பொருளுக்கு அடிமையான கும்பல் என்றும், நாஜிக்கள் என்றும் விமர்சித்துள்ளதோடு, நாட்டின் தலைமையை தூக்கி எறியுமாறு உக்ரைன் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தசூழலில் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கியபோது, நேட்டோவில் சேரப்போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நாட்டின் பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி...

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

teenager becomes one day pm of finland

 

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார். 

 

பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவிவகித்து வருபவர் சன்னா மரின். உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒருநாள் பணியாற்றவைத்தார். ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆவா முர்டோ பின்லாந்து நாட்டின் ஒருநாள் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.