ADVERTISEMENT

“அணு ஆயுத போருக்கும் தயார்” - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்ய அதிபர்

11:55 AM Mar 14, 2024 | mathi23

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், அணு ஆயுத போரில் அமெரிக்கா ஈடுபட்டால் அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

ரஷ்யாவில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் அதிகாரம் கிடைக்கும் என்பது உறுதியானது” என்று கூறினார். அப்போது, ‘நாடு உண்மையில் அணு ஆயுதப் போருக்கு தயாராக உள்ளதா’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்ததை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்.

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT