/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdsdsdss.jpg)
2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்து நீட்டிக்கும் வகையில் புதின் அண்மையில்கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக ரஷ்யாவில் மக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்ய நாட்டின் சட்டப்படி, ஒருவர் தொடர்ந்து இருமுறைக்கு மேல் அந்நாட்டின் அதிபராகப் பதவிவகிக்க முடியாது. ஆனால் அந்நாட்டின் தற்போதைய அதிபர் புதின் 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அடுத்தடுத்த அதிபர் தேர்தல்களில் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராக இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ரஷ்யச் சட்ட அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் புதின் போட்டியிடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
2008 வரை, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக இருந்த புதின், அதன் பின் பிரதமராகப் பதவி வகித்து, பின்னர் மறுபடி 2012 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றதைப் போலவே, தற்போதும் செய்ய நேரிடும் என்பதால், அதனைத் தவிர்ப்பதற்காக அண்மையில் சட்டத்திருத்தம் ஒன்றை ரஷ்ய அரசு கொண்டுவந்தது. கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த சட்டத்திருத்தத்தில், ரஷ்ய அதிபர் பதவிக் காலத்திற்கான வரம்பைத் தளர்த்துவது என முடிவெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ரஷ்ய அரசியலமைப்பு நீதிமன்றமும், அதிபர் புதினும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்தச் சட்டத்திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் 77.92 சதவீதம் பேர் புதின் அதிபராகத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 21.27% பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராகத் தொடரும் உத்தரவில் புதின் கையெழுத்திட்டார். இந்நிலையில், புதினின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாஸ்கோ உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுபுதினின் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் போலீஸார் போராட்டக்காரர்களைக் கைது செய்து நிலைமையைச் சீர்செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)