russia captures biggest nuclear plant in ukraine

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் ஒன்பதாவது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

உக்ரைன் நாடு மீது கடந்த 24-ந்தேதி போர் தொடுத்த ரஷ்யா, உக்ரைனின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல உக்ரைனின் 100க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாட கட்டமைப்புகளை ரஷ்யா அழித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் நேரடியாகத் தாக்குதல் நடத்தின. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகக் கருதப்படும் இதன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், அதிலிருந்து ஆறு அணு உலைகளில் ஒரு அணு உலையில் தீவிபத்து ஏற்பட்டது.

Advertisment

அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில் உக்ரைன் வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலின்போது உக்ரைனிய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா அணு உலையில் ஏதேனும் அணு விபத்து ஏற்பட்டிருந்தால் அது ஒட்டுமொத்த ஐரோப்பாவையுமே பாதித்திருக்கும் எனவும், அதன் பாதிப்பு செர்நோபில் அணு உலை விபத்தில் ஏற்பட்ட பாதிப்பை விடப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "ஒரு மிகப்பெரிய அணுமின் நிலையத்தைக் கையகப்படுத்தும் கிரெம்ளினின் முயற்சிகள் இதுவரை உலகம் கண்டிராத மோசமான பயங்கரவாதம். உடனடியாக எங்கள் நாட்டில் உள்ள வான்வழியை ரஷ்யா பயன்படுத்துவதைத் தடை செய்ய நோட்டோ உதவவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, "அணு உலை மீது தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம்" என உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.அதேநேரம் இந்த அணு உலையை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

Advertisment