ADVERTISEMENT

நேரடியாக களத்தில் இறங்கும் புதின்; அதிகரிக்கும் போர் பதற்றம்!

04:11 PM Feb 18, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் எனக் கருதப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், கிழக்கு ஐரோப்பாவிற்குப் படைகளையும், போர்க் கப்பல்களையும் அனுப்பியது.

இதனை தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்த நிலையில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் போரைத் தவிர்க்க ரஷ்ய அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் உள்ள படைகளைக் குறைப்பதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்காவோ ரஷ்யா படைகளை குறைக்காமல் அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீது படையெடுக்கக் காரணத்தை உருவாக்க முயல்வதாகவும், ரஷ்யா படைகள் போருக்குத் தயாராகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்காமல் இருந்தால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரும் அடுத்த வாரம் சந்தித்துப் பேசுவார்கள் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் உக்ரைன் அரசுப்படைகள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உக்ரைன் அரசோ தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியின் மீது கிளர்ச்சியாளர்கள், பீரங்கி மூலமும், மோட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தச்சூழலில் ரஷ்ய இராணுவம், தங்களது மூலோபாய படைகள் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இராணுவ பயிற்சியின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் பயிற்சிக்காக ஏவப்படவுள்ளன. இந்த பயிற்சியை புதின் மேற்பார்வையிடவுள்ளதாக ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்களும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதும், புதின் மேற்பார்வையில் மாபெரும் இராணுவ பயிற்சியில் ரஷ்யா ஈடுபடவுள்ளதும் தணியும் எனக் கருதப்பட்ட போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT