ADVERTISEMENT

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்க! இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம்!

12:21 PM Feb 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் கடந்த 43 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. பயங்கரவாதிகள் என யாரை சந்தேகப்பட்டாலும் அவர்களை விசாரிக்காமலே கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

இந்த சட்டம் பழி வாங்கும் நோக்குடன் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் கூறி, அந்தச் சட்டத்துக்கு எதிராகவும், சட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தி இலங்கையில் உள்ள தமிழர் அரசியல் கட்சிகள், முஸ்லீம் அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில், இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அது குறித்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது இலங்கை அரசு. அதே சமயம், இது ஒரு கண் துடைப்பு நாடகம் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

இந்த சூழலில், இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ரோஹினி மாரசிங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துகொண்ட அவர், “இந்த சட்டம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை விட, அந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.

இலங்கை அரசின் சட்டத்தை இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஒருவரே குற்றம் சாட்டியிருக்கும் இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT