/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/350_6.jpg)
இலங்கை குழப்பத்தால் ஆபத்து இனியும் இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்தியப் பாதுகாப்பையும், ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் குழப்பங்களால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இலங்கை அதிபரின் நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ள நிலையில் இந்தியா அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அவருக்கு பதிலாக போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒருவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமிப்பது அரசியல் சட்டவிரோதம் என ஏராளமான நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியல் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரித்தது. ஆனால், அதை மதிக்காத இலங்கை அதிபர் சிறிசேனா அடுத்தக்கட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறார். குதிரை பேரத்தின் மூலம் ராஜபக்சே பெரும்பான்மையை தேடிக்கொள்ள கால அவகாசம் வழங்கும் முயற்சி தான் இதுவாகும். சிறிசேனாவும், ராஜபக்சேவும் இணைந்து நடத்தும் இந்த ஜனநாயகப் படுகொலை தொடர அனுமதித்தால் அந்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.
இலங்கைக் தமிழர்களின் நலன் கருதியும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பைக் கருதியும் இலங்கையில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால், இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கி நான்கு நாட்களாகியும் இந்த விஷயத்தில் இந்தியத் தலைவர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்க்கப் போவதாக இந்தியா கூறியுள்ளது. இலங்கையில் ஏற்படும் மாற்றங்களால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத அமெரிக்கா, இந்த விஷயத்தில் தலையிட்டு ‘‘இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி யார் பிரதமர் என்பதை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்ள நிலையில், இந்தியா அமைதி காப்பது சரியல்ல. இந்தியாவின் அணுகுமுறை குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தை பூட்டுவதற்கு சமமானதாகி விடும்.
இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு ஆதரவாக சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முயன்றதால் தான் பதவி நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. திரிகோணமலைப் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க விரும்பினார். அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவர் தில்லி புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று சிறிசேனா தடை விதித்ததாகவும், அதனால் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மட்டும் அப்போது கையெழுத்தானதாகவும் வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இந்திய பிரதமரை சந்தித்து பேசிய போது கூட எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதனால் ரணில் & மோடி சந்திப்பில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை குலைக்கும் வகையில், சிறிசேனாவை கொலை செய்ய இந்தியாவின் ‘ரா’ அமைப்பு சதி செய்ததாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. இதற்கு முன் 2015 தேர்தலில் தமது தோல்விக்கு ‘ரா’ அமைப்பு தான் காரணம் என்று ராஜபக்சே குற்றஞ்சாட்டியிருந்தார். இதிலிருந்தே இந்தியாவின் பொது எதிரிகள் யார்? என்பதை உணர முடியும். ஆனால், இந்தியா அதை உணர்ந்ததாக தெரியவில்லை.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், அங்குள்ள திரிகோணமலை துறைமுகமோ, மாத்தளை விமான தளமோ இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடக் கூடாது என்று சீனா விரும்புகிறது. அதற்காக நடத்தப்படும் சித்து விளையாட்டுகள் தான் இலங்கையில் இப்போது நடத்தப்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் தெரிந்தும் இந்த விஷயத்தில் இந்திய அரசு அமைதி காப்பதன் மர்மம் என்னவென்று விளங்கவில்லை.
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டால் அது ராணுவரீதியாக இந்தியாவை சீனா சுற்றி வளைப்பதற்கு சமமாகி விடும். எனவே, இந்த விஷயத்தில் இந்தியா அமைதி காப்பதை விடுத்து, இலங்கையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரே பிரதமராக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்தியப் பாதுகாப்பையும், ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)