ADVERTISEMENT

8 இந்தியர்களின் மரண தண்டனை; மேல்முறையீட்டு வழக்கில் கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

11:32 PM Dec 30, 2023 | mathi23

கடந்த வருடம் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'. இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது.

ADVERTISEMENT

இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்த 8 பேரையும் கடந்த ஆண்டு கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம்.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கியதை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும், இந்திய அரசின் மேல்முறையீடு குறித்து விரைவில் விசாரிக்கவும் கத்தார் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை செய்த கத்தார் நீதிமன்றம், 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தீர்ப்பு குறித்து விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT