ADVERTISEMENT

கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் புதின் - உச்சக்கட்டத்தை எட்டும் பதற்றம்!

10:36 AM Feb 22, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், கிழக்கு ஐரோப்பாவிற்குப் படைகளையும், போர்க் கப்பல்களையும் அனுப்பியது.

இதனால் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா, அண்மையில் உக்ரைன் எல்லையில் படைகளை குவிப்பதாக அறிவித்தநிலையில், அமெரிக்கா ரஷ்யா படைகளைக் குறைக்காமல் அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீது படையெடுக்கக் காரணத்தை உருவாக்க முயல்வதாகவும், ரஷ்யப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியது. அதேசமயம் ரஷ்யா இராணுவம் புதினின் மேற்பார்வையில் மாபெரும் பயிற்சியை மேற்கொண்டது.

இந்தச்சூழலில் உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளையும், ரஷ்ய ஆதரவுப் பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதிகளில் மோதல் அதிகரித்தன. தங்கள் பகுதிகளில் உக்ரைன் அரசு தாக்குதல் நடத்துவதாக கிளர்ச்சியாளர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசும் மாறி மாறி குற்றஞ்சாட்டினர்.

இந்தச்சூழலில் நேற்று அதிரடி நடவடிக்கையாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார். இது போரை தவிர்க்க முயன்று வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியநிலையில், அமைதியை பேணுவதற்காக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு ரஷ்ய இராணுவத்தை அனுப்பவும் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா, கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் புதினின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஒன்று, இந்தியர்களை மீட்க உக்ரைனுக்கு விரைந்துள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம், இன்றும், 24 மற்றும் 26 ஆம் தேதிகளிலும் இந்தியர்களை மீட்க உக்ரைனுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT