“பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - கனடாவில் பிரதமர் மோடி பேச்சு!

Prime Minister Modi speaking in Canada g7 summit 2025

வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஜி-7 மாநாடு, இந்தாண்டு கனடாவில் கடந்த ஜூன் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரின் காரணமாக டிரம்ப் கனடாவில் இருந்து முன்கூட்டியே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.

இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்ததன் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (18-06-25) பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜி7 மாநாட்டு தலைவர்களிடம் வலியுறுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி, “உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு நமது சிந்தனையும், கொள்கையும் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை எந்தவொரு நாடும் ஆதரித்தால், அதற்கான தக்க விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

Prime Minister Modi speaking in Canada g7 summit 2025

ஒருபுறம், எங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் நாங்கள் விதிக்கிறோம், மறுபுறம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. வளர்ச்சி உள்ளடக்கிய பாதையை இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) என்பது ஒரு ஆற்றல் மிகுந்த தொழில்நுட்பமாகும். கடந்த நூற்றாண்டில் ஆற்றலுக்கான போட்டி இருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் தொழில்நுட்பத்திற்காக நாம் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது” எனப் பேசினார்.

கனடாவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். முன்னதாக சைப்ரஸ், குரோஷியா, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசு முறையாகப் பயணம் மேற்கொண்டார். ஜி-7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Canada g7 summit mark carney modi
இதையும் படியுங்கள்
Subscribe