President Draupadi Murmu pays tribute to Queen Elizabeth of London!

Advertisment

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராணி எலிசபெத்தின் மறைவு குறித்தான இரங்கல் பதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார்.

Advertisment

இதற்காக லண்டன் கிளம்பிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் லண்டனுக்கு சென்றடைந்தார். குடியரசுத் தலைவருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினே குவாத்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்து இடுகிறார். அதன்பின்னர் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அளிக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை நடக்கவிருக்கும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்.