Skip to main content

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை; தடையை நீட்டித்த பாகிஸ்தான்!

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

Pakistan extends airspace ban for Indian flights

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது. 

அதனை தொடர்ந்து,  பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்திய விமானங்களுக்கான தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவு, சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, வான்வெளி பகுதியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால், இரு நாடுகளுக்கு இடையே நடந்த வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது. இருப்பினும், அரசு மற்றும் தூதரக ரீதியாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதத்திற்கு மட்டுமே வான்வெளியை நிறுத்தி வைக்க முடியும். அதனால், மே 23ஆம் தேதி வரை இந்த தடையைப் பாகிஸ்தான் விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்