
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியாவுடன் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் துணை பிரதமருமான இஷாக் தார் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று செனட்டில் உரையாற்றிய அவர், “இந்தியாவுடனான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க இறுதியில் ஒரு அரசியல் உரையாடல் நடக்க வேண்டும்” என்றார். இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் திரும்புவது மற்றும் பயங்கரவாதப் பிரச்சினை குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியா தெளிவுபடுத்தி வருகிறது.
பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உறுதியோடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.