
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது.
அதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இதனிடையே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்ததால் இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. சிந்து நநி நீர் நிறுத்ததை நாங்கள் போர் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்வோம் என்று பாகிஸ்தான் பிரதமரே கூறியிருந்தார்.
ஆனால் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே ஓட முடியாது, இனி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளையும் பேச்சுவார்த்தையாக மட்டுமே இருக்கும்”என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை நிறுத்துவோம்” என்று பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஷெரீப் சவுத்ரி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவரின் இந்த கருத்திற்கு எதிராக பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எச்சரிக்கை வந்தாலும் சரி கோரிக்கை வந்தாலும் சரி என்ற ரீதியில், “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி தண்ணீர் வழங்கப்படாது” என இந்தியா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.