Advertisment

ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய பேஜர்கள்; மிரண்டு போன லெபனான் - மிரட்டும் இஸ்ரேல்?

Pagers detonated simultaneously in Lebanon

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓர் ஆண்டை எட்டவுள்ள நிலையில் போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு சாத்தியக்கூறுகளும் இதுவரை தென்படவில்லை.

Advertisment

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல் வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்று பல்வேறு யுத்திகளை கையாண்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பேஜரை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று லெபனானில் இருக்கும் சில அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஹமாஸ் அமைப்பைச் சேராத பலரும் பேஜர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று(17.9.2024) மாலை 3 மணியளவில் லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மக்கள் பயன்படுத்திய பேஜர் வெடித்துச் சிதறியது. அதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகம் இருக்கும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,800 பேர் காயமடைந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் வெடிக்கத் தொடங்கிய பேஜர், ஒரு மணிநேரம் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்குத் திரும்பினர். உயிரிழந்த 12 பேரில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், அதேசமயம் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. லெபனானில் நடந்த அதே சமயத்தில் சிரியாவில் முகாமிட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருக்கும் பேஜர்களும் வெடித்துச் சிதறியுள்ளது. அதனால் அங்கேயும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் பிரதமர் நாஜிப் மிகாட்டி, “இது எங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். இது கடுமையான குற்றம்” எனத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நிச்சயம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக, சைபர் குற்றங்கள் அதிகரிக்கிறது. அத்தோடு மட்டுமில்லாமல் செல்போன்கள் மூலம் பலர் கண்காணிக்கப்படுவதாக அவ்வப்போது வெளியாகும் தகவல் பகீர் கிளப்பும் நிலையில், தாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவோம் என்று கருதிய ஹிஸ்புல்லா, எளிதில் ஹாக்(heack) செய்ய முடியாத குறுஞ்செய்தியை மட்டுமே பரிமாறிக்கொள்ள உதவும் பழங்கால பேஜர் முறையை பயன்படுத்தி வந்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் பெரும்பாலும் தைவானில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படி ஹிஸ்புல்லா அமைப்பினர் பல மாதங்களுக்கு முன்பு தைவானில் ஆடர் செய்ய சொல்லியிருந்த 5 ஆயிரம் பேஜர்களில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத், ஜிப்பில் சிறிய அளவிலான வெடி மருத்தை வைத்திருந்ததாக லெபானான் குற்றம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமயம் வரை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

palestine israel lebanon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe