Skip to main content

கொரியா-தமிழக வரலாற்றுத் தொடர்புகள்! இந்திய தூதரக அதிகாரியிடம் ஒரிசா பாலு விளக்கம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

கொரியா தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ் கலை இலக்கிய விழாவுக்கு வந்திருந்த கடல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா கொரியா கடல்வழித் தொடர்புகளையும், கொரியா தமிழக பழக்க வழக்கங்களில் உள்ள ஒற்றுமைகளையும் கொரியா தூதரக அதிகாரியிடம் விளக்கிக் கூறினார்.
 

orissa balu explains about tamil culture in korea



கொரியாவின் புசான், தேகு மற்றும் கீமே உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பயணம் மேற்கொண்ட அவர் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் நிலை செயலரும் கான்சுளருமான செரிங் அங்குக்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் கொரியா நாடுகளுக்கிடையே வரலாற்று ரீதியாக இருந்த கடல் வழித்தொடர்புகளை பற்றி உரையாடினார்.  குறிப்பாக கடல் நீரோட்டத்தின் வழியே நிகழும் ஆமை வழித்தடத்தின் இன்றியமையாமை குறித்தும், கொரியாவின் ஜேஜூ தீவு மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படும் முத்துக்குளிப்பின் ஒற்றுமை குறித்தும் பேசினார்.

இதனை ஆர்வத்துடன் கேட்டறிந்த கான்சுலார் இந்த வரலாற்றுத் தொடர்பை மேலும் உறுதி செய்வதன் மூலம் இந்திய-கொரியா இருநாட்டு கலாச்சார உறவை மேலும் உயர்த்த முடியம் என்றார். அவரிடம் தமிழ் மற்றும் கொரியா மக்களுக்கிடையேயான உணவு, வாழ்வியல் மற்றும் வழிபாட்டு பழக்கங்களின் ஒற்றுமை குறித்தும் பாலு விளக்கம் அளித்தார்.


1800-ம்  ஆண்டு காலத்தில் பாண்டிச்சேரியிலிருந்து சென்ற பிரென்ச் பாதிரியார்களும், 1905-ல் கொரியா வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் கில்பர்ட் என்பவரும் தமிழ்-கொரிய வரலாற்று தொடர்பை தெளிவாக பதிவு செய்திருப்பதையும், தன்னுடைய ஆராய்ச்சியின்போது கிடைத்த வரலாற்று சான்றுகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இந்த சந்திப்பின்போது தூதரகத்தின் கல்வி, பண்பாடு, மற்றும் தொழில்துறை செயலரான சோஸ் ஆண்ட்ரோ கெல்த்தா உடனிருந்தார். இந்தச் சந்திப்பை கொரிய தமிழ்ச்சங்த்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் சுப்ரமணியன் இராமசுந்தரம் ஏற்பாடு செய்திருந்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.