/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/abudhabi-ni.jpg)
பிரதமர் மோடி 2 நாள் அரசுப் பயணமாக இன்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) செல்கிறார்.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்று அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
அதன் பின்பு, நாளை (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார். இதனையடுத்து, அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர்பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்த போது, அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்துக் கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us