Skip to main content

கமலா ஹாரிஸ் தேர்வு குறித்து ஒபாமா கருத்து...

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

obama about kamala harris selection

 

 

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனநாயக கட்சியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஜோ பிடென் ஆதரவாளரான ஒபாமா, "துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பது ஒரு அதிபரின் முதல் முக்கிய முடிவு. ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் ஒரு தேர்வு முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம். அந்த தருணங்களில் சரியான தீர்வையும், ஆலோசனையும் வழங்குபவர் உங்கள் அருகில் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது” - கமலா ஹாரிஸ்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Kamala Harris says Just thinking about Donald Trump as president is scary

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“ஒபாமாவின் பேச்சுக்கு காங்கிரஸே காரணம்” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Nirmala Sitharaman condemns Obama's speech on PM Modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

 

அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார்.  அதே நேரத்தில் அமெரிக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த காலத்தில் இந்தியா மீது இதுபோன்ற புகார்களை எழுப்பியது யார் என்பதனை உற்றுநோக்க வேண்டியது அவசியம். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் ஏமன், சிரியா, சவுதி, ஈராக் என 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் சூழலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தும் வியப்பைத் தருகிறது. பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் இதுவரை அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது. அதில் 6 இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாததால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை வெளிநாடுகளில் பேசி வருவதே ஒபாமா போன்றவர்களின் கருத்துகளுக்குக் காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.