Skip to main content

ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
 
Notification of helpline numbers for Indians in Japan

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுனாமி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்தியத் தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 90 நிமிடங்களில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 21 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5க்கும் மேல் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள 36,000 வீடுகளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்தியத் தூதரகம் சார்பில் அறிவித்திருக்கிறது. மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, +81 8039301715, +81 7014920049, +81 8032144734, +81 8062295382, +81 8032144722 ஆகிய உதவி எண்களும், cons.tokyo@mea.gov.in, seco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளை உதவிக்காகத் தொடர்பு கொள்ளலாம் எனத் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சார்ந்த செய்திகள்