Skip to main content

ஈரோட்டுத் தமிழரின் மகளுக்கு, ஜோ பைடன் வழங்கிய முக்கியப் பொறுப்பு!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

New President Joe Biden has given high recognition to the daughter of a Tamil in the United States


 
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தற்போது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபரான  ஜோ பைடன் அமெரிக்க நாட்டில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் உறுப்பினராக அதிபரால் நியமிக்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த செலின் ராணி. 


செலின் ராணி, அமெரிக்காவில் பெண் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். புதிய புதிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ள அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டுக்கு 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில், 3 பேர் உள்ளார்கள். அதில் ஏற்கனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், இந்தக் குழுவின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவரான செலின் ராணி, நியமிக்கப்பட்டிருக்கிறார். 

 

New President Joe Biden has given high recognition to the daughter of a Tamil in the United States
                                                               செலின் ராணி

 

டாக்டர் செலின் தற்போது நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  முன்பு அமெரிக்க நாட்டின் காச நோய்த் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.


1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில், தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இது தவிர தமிழக நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களைப் பாதிக்கும் நோய்கள் குறித்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துள்ளார்.


செலின் ராணி பற்றி ஈரோட்டில் வசிக்கும் அவரது பெரியப்பா மகனும் ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளருமான தங்கவேல் கூறும்போது, "செலின் ராணியின் தந்தை பெயர், ராஜ். அவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று, கடந்த 1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு அந்நாட்டு போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றியதோடு, அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். 

 

nkn

 

அப்போது அவர் அந்த நாட்டைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, தொடர்ந்து அங்கேயே இப்போதும் வசித்து வருகிறார். அவருக்கு 3 பெண் குழந்தைகள், அதில் மூத்தவர் தான் செலின் ராணி. இவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். இதுவரை நான்கு முறை அவரது தந்தை வழி பூர்வீகமான,  மொடக்குறிச்சிக்கு வந்துள்ளார். மொடக்குறிச்சியில் தந்தை பெயரில், 'ராஜ் பவுண்டேசன்' என்ற அமைப்பின் மூலமாக அவர் தந்தை படித்த மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். 35 வயதான செலின் ராணியின் கணவர், கிராண்ட். இவர் அமெரிக்காவில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது" என்றார்.


தமிழகத்தில் கொங்கு மண்ணைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரின் மகளுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் கொடுக்கப்பட்ட ஊக்கம். செலின் ராணி பெயர் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது மொடக்குறிச்சி வட்டார கிராம மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்