Skip to main content

வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

imgenuity

 

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது அக்கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.

 

இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்தது. இந்த விண்ணூர்தி, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

 

இந்த ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியில், ‘இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனுயிட்டி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. அப்போது, வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையை இன்ஜெனுயிட்டி பெறும். வேற்று கிரகத்தில் பறக்கவுள்ள முதல் ஹெலிகாப்டர் என்பதால் இந்த இன்ஜெனுயிட்டியில், ரைட் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட துணியின் சிறிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஏலகிரி மலையில் திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
helicopter suddenly landed on the Yelagiri hills causing excitement

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ரத்னா ஜெயின் (50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துச் செல்ல பெங்களூரிலிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்துள்ளனர்.

இதன் காரணமாகத் திடீரென ஏலகிரி மலையில் டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. இதனைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடமும் அல்லது மாவட்ட போலீசாரிடமும் முறையான அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கி இருந்தாலும், இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் எனக் கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.