Skip to main content

இடைவேளையில் வந்து குழந்தைக்கு பாலூட்டும் ஹாக்கி வீராங்கனை!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

ஹாக்கி வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் அனைவரிடத்திலும் பாராட்டு பெற்றுள்ளது.  

 

breast

 

கனடா நாட்டில் உள்ள ஆல்பெர்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஸெரா ஸ்மால். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஹாக்கி அணியில் விளையாடி வருகிறார். அதேபோல், ஆல்பெர்ட்டாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். 

 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஹாக்கி போட்டியில் கலந்துகொண்ட அவர், இடைவேளை நேரத்தில் ஓய்வறைக்கு சென்று தனது 8 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது எடுத்த படத்தை தாய்ப்பால் ஆலோசகருக்கு ஸ்மால் அனுப்ப, அவர் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த முகநூல் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் பலரிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

‘எல்லா அம்மாக்களும் செய்வதைத்தான் நானும் செய்திருக்கிறேன். என் குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ எனக்கூறும் ஸ்மால், ‘தாய்ப்பால் கொடுப்பது மிக அத்தியாவசியமானது’ எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தாய்ப்பால் கொடுத்தா அழகு போயிடுமா? - விளக்குகிறார் டாக்டர் கல்பனா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Breast feeding tips - Dr Kalpana

 

தாய்ப்பால் கொடுப்பது குறித்த பல்வேறு தகவல்களை நம்மோடு டாக்டர் கல்பனா பகிர்ந்துகொள்கிறார்

 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுசேர்ப்பது தான் இதன் நோக்கம். குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு தாய்ப்பால் மூலம் வருகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அத்தனை நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. தாய்ப்பாலுக்கான சரியான மாற்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. 

 

ஒருவருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரந்தால் அதை தாய்ப்பால் வங்கியில் வழங்கலாம். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் குழந்தைக்கு ஏற்படும் தொற்றுகள், குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கும். அதனால் தான் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசுகிறோம். தந்தையை விட தாயுடன் தான் குழந்தைகளுக்கு அதிகமான பிணைப்பு எப்போதும் இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, இளம் தாய்மார்களுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டுள்ளது. 

 

குழந்தைகளுக்கு முதல் நான்கு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால் அவர்கள் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குவர். குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருக்கும். எனவே தாய்ப்பால் குழந்தைகளுக்கும் பயனளிக்கிறது, தாய்மார்களுக்கும் பயனளிக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இதய நோய், கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

பாலூட்டும் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு தான். அதனால் தான் அந்தக் காலத்துப் பெண்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் ஏற்படாமல் இருந்தது. தாய்ப்பால் என்பது மிகவும் வீரியம் மிக்கது. அனைத்து குழந்தைகளுக்கும் இது கிடைக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டுவிடும் என்கிற தவறான நம்பிக்கை இங்கு இருக்கிறது. அது முழுக்க முழுக்க பொய்யான ஒரு விஷயம். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் நாம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 

 

 

 

Next Story

சிதம்பரத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published on 09/08/2023 | Edited on 10/08/2023
 Breastfeeding awareness program in Chidambaram

 

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் தாய்ப்பால் வார விழா வீனஸ் பள்ளி நிர்வாகம் மற்றும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் கலந்து கொண்டு தாய்ப்பால் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினார்.  இதனைத் தொடர்ந்து குழந்தைகள் வளர்ப்பு குறித்த மலரை வெளியிட்டார். பின்னர் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் மாணவிகளுக்கு கேடயம், சான்றுகளை வழங்கிப் பாராட்டினார்.

 

இதில் குழந்தைகள் நல மருத்துவர் சிவப்பிரகாசம், பெண்கள் குடும்ப நல மருத்துவர் பத்மினி, இன்னர் வீல் சங்கத்தின் தலைவர், பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் மருத்துவர் பத்மினியிடம் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.