Skip to main content

மைக்ரோசாஃப்ட் நிறுவன சி.இ.ஓ சத்ய நாதெல்லாவின் 26 வயது மகன் உயிரிழப்பு!

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

microsoft ceo satya nadella's son passed away

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவின் மகன் செயின் நாதெல்லா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 26 வயதான செயின் நாதெல்லா பிறப்பிலிருந்தே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுவயது முதலே இதற்காக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த சூழலில் திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். 

 

செயின் நாதெல்லா மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிர்வாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "செயின் மறைந்துவிட்டார். ஊழியர்கள் சத்ய நாதெல்லா மற்றும் அவரது குடும்பத்தாரை தங்கள் நினைவில் வைத்து பிரார்த்தனை செய்து, அவர்களுக்கு தனிமையில் இருக்க உதவுங்கள்," எனத் தெரிவித்துள்ளது.

 

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சத்ய நாதெல்லா கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2014 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத்ய நாதெல்லா பொறுப்பேற்றதிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக பல தயாரிப்புகளை வடிவமைப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. செயின் நாதெல்லா மறைவைத் தொடர்ந்து சத்ய நாதெல்லாவுக்கும் அவரது மனைவி அனுபமாவிற்கும் மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் டாக்; புதிய முயற்சியில் அன்பில் மகேஷ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Talk with Microsoft for public school students!; Anbil Mahesh in a new venture

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 

கடந்த அக்டோபரில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். முடிவுகளை வெளியிட்ட பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “எந்த நிகழ்விற்குப் போனாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைப்பவன். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது கூட அவரிடம் பேசினேன். சார், ஏதோ தனியா க்ளாஸ் வச்சு நடத்துறதா கேள்விப்பட்டேன். அதில் அரசுப்பள்ளி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டு உள்ளோம் என்று சொன்னார். உள்ளபடியே மகிழ்ச்சி. 

 

அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போய் பார்த்தோம். டீல்ஸ் என்ற அமைப்பின் மூலமாக ஐ.டி. துறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் நபர் அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று தான் பணியாற்றும் துறை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அதைப் பார்க்க முடிந்தது. இதே போன்ற நிகழ்வை நீங்கள் எங்கள் பள்ளி மாணவர்களிடமும் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லியுள்ளோம். 

 

வெறுமனே நீங்கள் பாடம் நடத்திச் செல்வதைக் காட்டிலும் உங்கள் நிறுவனத்தின் சான்றிதழ் கிடைத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து செல்லும்போது அவர்களுக்கு இன்னும் அது மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நிறுவனத்தில் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்லுகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

 

 

Next Story

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டம்; அமைச்சர் நேரடி விசிட்  

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Minister Anbil Mahesh directly visited the technical education program of Microsoft

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அன்பான அழைப்பை ஏற்று  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குழுவினருடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களைப் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றலுக்குத் துணைநிற்றல் (TEALS) திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் தலைமையிலான குழுவினரை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவின் இயக்குநர் சிசில் சுந்தர், பொது மேலாளர் சேவைகள் ஜெய் நடராஜன், TEALS திட்டத்தின் தலைவர் பீட்டர் ஜூபே. நிறுவனத்தின் களத் தலைமை ஆண்ட்ரியா ரூசோ ஆகியோர் வரவேற்றனர்.

 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழ்பெற்ற பாஸ்டன் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ் & லத்தீன் பப்ளிக் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் ரோபோட்டிக் கலை, செயற்கை நுண்ணறிவு, கணினி எழுத்தறிவு கலைத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மைக்ரோசாஃப்ட் குழுவினர் மற்றும் தொழில்நுட்பத் தொழிலகங்களின் பிரதிநிதிகள், மைக்ரோசாஃப்ட் TEALS திட்டத்தின் வாயிலாக தொழில்நுட்பக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக் கல்விக்கு தயார் செய்தல் ஆகியவை குறித்து அமைச்சருக்கு விவரித்தனர்.

 

Minister Anbil Mahesh directly visited the technical education program of Microsoft

 

பள்ளிப் பார்வையைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப மையத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களையும், நிறுவனத்தினரையும் சந்தித்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான பாடத்திட்டம் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த விவாதம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் ஆகியவற்றில் நவீனப் பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய பாடத்திட்டம் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துடன் நிலைத்த ஆக்கப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இந்தக் கருத்துரு தனது துறையால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இதில் பயன்பெறும் மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்கிட முன்வர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

 

தமிழ்நாட்டில் TEALS திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குத் தர நிர்ணயம் வழங்கிட பரவலாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமல் செயல்படுவதற்கான வெளியையும் பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை பங்கேற்பின் தேவையையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சிசில் சுந்தர் மற்றும் ஜெய் நடராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.