ADVERTISEMENT

மங்களூர் குக்கர் வெடிப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியீடு; ஷரிக் உடன் இருந்த மற்றொரு நபர் யார்?

01:36 PM Nov 22, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த ‘பயங்கரவாதச் செயல்’. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலக் காவல்துறை மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஷரிக்கிற்கு நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷரிக், நாகர்கோவிலில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அஜிம் ரகுமான் என்பவருடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. ஷரிக் மற்றும் அஜிம் ரகுமான் இடையே ஏற்கனவே தொடர்பு உள்ளதா என்றும், செல்போனில் என்ன பேசி இருப்பார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் ஷரிக் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குக்கர் வெடிகுண்டுடன் வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு முன்னதாக ஷரிக் ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் ஷரிக் தனது தோளில் பையை சுமந்து செல்லும் காட்சி பேருந்து நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அவர் கொண்டு வந்த பையில் வெடித்த குக்கர் இருந்ததா என்ற வகையில் விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சியில் ஷரிக் மற்றும் மற்றொரு நபரும் இணைந்து பேசிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த மற்றொரு நபர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஷரிக்கிடம் வெடிபொருட்கள் இருந்து அதேபோல் அந்த மற்றொரு நபரிடமும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT