Skip to main content

ஜாலியன்வாலாபாக்கிற்கு பழிவாங்க எலிசபெத் ராணியை கொல்ல முயன்ற சீக்கியர்? - இங்கிலாந்தில் பரபரப்பு!   

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

elizabeth

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்று விண்ட்சர் கோட்டை. இந்த கோட்டையில் உள்ள மைதானத்தில் வைத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது சீக்கியரை பிரிட்டன் காவல்துறை கைது செய்தது. அவரிடமிருந்து குறுக்கு வில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. முதலில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகவும், அபாயகரமான ஆயுதத்தை கையில்  வைத்திருந்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சீக்கிய இளைஞர் மீது மனநல சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில் பிரிட்டனின் தி சன் ஊடகம், கைது செய்யப்பட்டுள்ள நபர், கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஸ்னாப்ஷாட் கணக்கில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் முகத்தை மறைந்துள்ள நபர் கையில் ஆயுத்தோடு, "நான் செய்தவற்றுக்காகவும், நான் என்ன செய்யப்போவதற்காகவும் என்னை மன்னிக்கவும். நான் அரச குடும்பத்தின் ராணி எலிசபெத்தை கொல்ல நினைக்கிறேன். இது 1919 ஆம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கான பழிவாங்கல். மேலும் இனத்தின் காரணமாக கொல்லப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட மற்றும் பாகுபாடு காட்டப்பட்டவர்களின் சார்பில் நடைபெறும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் ஒரு இந்திய சீக்கியன். என் பெயர் ஜஸ்வந்த் சிங் சைல். என் பெயர் டார்த் ஜோன்ஸ்" என்கிறார்.

 

தற்போது இங்கிலாந்து காவல்துறை, இந்த வீடியோ குறித்து விசாரித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எலிசபெத் ராணியை கொல்ல சதி; இந்தியருக்கு சிறை தண்டனை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Indian jailed because Queen of England

 

இங்கிலாந்து எலிசபெத் மகாராணியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது, அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் போலீஸார் கைது செய்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்துள்ளார். 

 

21 வயதான இவர், கடந்த 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். முகத்தில் முகமூடி அணிந்து அந்த அரண்மனையில் ஊடுருவிய ஜஸ்வந்த சிங்கை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த 1919ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் ராணி எலிசபெத்தை கொல்ல வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் ஜஸ்வந்த் சிங்கை கைது செய்தனர். 

 

இதனையடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

இங்கிலாந்து மன்னராக முடி சூடப் போகும் மூன்றாம் சார்லஸ்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Charles III to be crowned King of England

 

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

 

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது. சார்லஸ்ஸை அழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது. 

 

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூடிக்கொண்ட பிறகு அவரும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். மன்னராக முடி சூட்டப்படும் சார்லஸ்க்கு புனித எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கமிலா இங்கிலாந்து இராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். 

 

இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.