ADVERTISEMENT

ஆட்சி கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியவரையே அதிபராக நியமித்த நீதிமன்றம்!

02:34 PM May 29, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டில் அப்போதிருந்த ஆட்சி கலைந்து, இடைக்கால அரசு ஏற்பட்டது. மாலியின் அதிபராக பா டாவ்வும் பிரதமராக மொக்தார் உவானேவும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை வழிநடத்திய இரு இராணுவ வீரர்கள், இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தலைமை தாங்கிய இராணுவ கர்னல் கொய்டா துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், நேற்று (28.05.2021) கடந்த 24ஆம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு இராணுவ வீரர்களும் நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இடைக்கால அரசின் அதிபரையும், பிரதமரையும் மாலி இராணுவம் கைது செய்தது. மேலும் பாதுகாப்புத்துறை மந்திரியும் கைது செய்யப்பட்டார். இது அந்த நாட்டில் பதற்றத்தையும், இராணுவ ஆட்சி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.

மாலி இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையும், ஆப்பிரிக்க யூனியனும் கூட்டாக கண்டனம் தெரிவித்தன. மேலும், கைது செய்யப்பட்ட அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை உடனடியாக எந்த நிபந்தனையியுமின்றி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.

இந்தநிலையில் அதிகரித்த சர்வதேச அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்ட மாலி நாட்டு அதிபரும், பிரதமரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மாலி நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம், ஆட்சிக் கவிழ்ப்பை வழிநடத்திய, அதிபரையும் பிரதமரையும் கைது செய்ய உத்தரவிட்ட இராணுவ கர்னல் கொய்டாவை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற பிறகு, புதிய அரசை 18 மாதத்தில் அமைக்கவும், அதுவரை இடைக்கால அரசு ஆட்சி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இடைக்கால அரசின் அதிபர் மற்றும் பிரதமர் நீக்கப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியவரே அதிபராகியிருப்பது மீண்டும் மாலியில் மக்கள் ஆட்சி அமைவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT