Advertisment

மாலத்தீவு அதிபரின் திடீர் அறிவிப்பு; இந்தியா - மாலத்தீவு விரிசல்?

Maldives President's Sudden Announcement; India-Maldives rift?

அண்மையில் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

Advertisment

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத்தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisment

இதற்கிடையே, மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது முய்சு வெற்றி பெற்று அதிபராகப்பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாலத்தீவில் முகாமிட்டிருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலத்தீவில் இருந்து உடனடியாக இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனப் பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியா - மாலத்தீவு இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.

India Maldives
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe