Live, the professor who tore up his certificates; Tension in Afghanistan

நேரலை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஒருவர் தனது சான்றிதழ்களை தானே கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடைபெறும் என்று தாலிபன்கள் அறிவித்தனர். இதனால் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு மக்கள் மேல் விதித்தது.

Advertisment

குறிப்பாக, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். தொடக்கக் கல்வியில் பெண்களுக்கு அனுமதி அளித்தும் மேல்நிலைக் கல்வியை மறுத்தனர். பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாகச் செல்வதற்கும் தடை விதித்தனர். தாலிபான்களின் செயலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காபூல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கலந்து கொண்டார். நேரலையில் ஒளிபரப்பப்பட்ட அந்த விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் பேராசிரியரும் தங்களது வாதங்களை முன்வைத்துப் பேசி வந்தனர். தொடர்ந்து பேசிய பேராசிரியர் தான் உடன் கொண்டு வந்திருந்த தனது டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை நேரலையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

மேலும் பேசிய அவர், “எனது சகோதிரிகளுக்கு கல்வியில் இடம் இல்லை என்கிறபோது என்னால் மட்டும் எப்படி இந்தக் கல்வி முறையை ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கூறினார். ஒரு பேராசிரியர் தனது சான்றிதழ்களை தானே கிழித்துப் போட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.