lebanon denies international probe in beirut accident

Advertisment

பெய்ரூட் வெடிவிபத்து குறித்து சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என லெபனான் தனது முடிவை உறுதியாக அறிவித்துள்ளது.

பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாகதிருப்பிபோட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில்,இந்த விபத்தில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாகச் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா சபை அறிவுறுத்தியது.

இதுதவிர லெபனான் எதிர்க்கட்சிகள், பிரான்ஸ் உள்ளிட்டோரும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், மற்ற நாடுகளின் தலையீட்டை விரும்பாத லெபனான் அரசு, இதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த சூழலில், பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ''அமைச்சகம் இது தொடர்பான விசாரணையைச் செவ்வாய் கிழமையே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை'' என்று தெரிவித்துள்ளார்.