Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

Advertisment

இலங்கையிலுள்ள கச்சத்தீவில் அருள்மிகு கயற்கண்ணி திருகச்சேச்சரநாதர் திருக்கோயிலில் மீண்டும் திருப்பணி மற்றும் குடமுழுக்குச்செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய அரசின் உதவியைக் கேட்டுள்ளார் 'காந்தளகம்' பதிப்பகத்தின் உரிமையாளரும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவருமான மறவன்புலவு சச்சிதானந்தன்.

இதுகுறித்துப் பேசும் அவர், "கச்சத்தீவில் இருக்கும் கத்தோலிக்க கிருத்துவத்துக்கு மாறாத சைவர்கள், திருகச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் சிவனின் திருமேணியை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இலங்கையிலுள்ள நெடுந்தீவு மீனவர்களுக்கும், தொண்டி முதல் ராமேஸ்வரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்காலமாக இருந்து வருகிறது. நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற தமிழகத்திலிருந்து கச்சத்தீவுக்கு தமிழகமீனவர்கள் வந்து போவார்கள்.

நெடுந்தீவு மீனவர்கள் கச்சத்தீவில் அந்தோனியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். இதனால் சைவ வழிபாடுகள் முற்றிலும் தொய்வுற ஆரம்பித்தது. பத்தாயிரமாண்டுகளுக்கும் கூடுதலான சைவ வழிபாட்டு மரபுகள் தொய்வுற்றதில் இலங்கையிலுள்ள சைவர்களும், இந்திய சைவர்களும் மிகவும் வருந்தினர். அதனால், கச்சித்தீவிலுள்ள அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதர் திருக்கோயிலைப் புனரமைத்து மீண்டும் அக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கும் நடத்தப்பட வேண்டும். இது நடந்தால், இலங்கையில் வாழும் சைவர்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கும்" என்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன்.

Advertisment

Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

கச்சேச்சரநாதர் திருக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கு நீராட்டும் நடக்க இந்தியப் பிரதமர் மோடியின் உதவியைக் கேட்டுள்ளார் சச்சிதானந்தன். தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், சச்சிதானந்தத்தின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

"தமிழகத்துக்குச் சொந்தமாக இருந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில், கச்சேச்சரநாதர் திருக்கோயில் திருப்பணித் தொடங்கினால் சைவர்களின் மனம் மகிழும். தமிழகத்தின் ஆன்மிகப் பக்தர்களும் ஆனந்த கூத்தாடுவார்கள். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என்கிறார் காயத்ரிரகுராம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் சச்சிதானந்தத்தின் கோரிக்கை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு விவாதிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.