Joe Biden says Israel must change its political stance

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு, பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமாக நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார்” என்று கூறினார்.