Skip to main content

கரோனா விவகாரம்: பதவியை துறக்கிறார் ஜப்பான் பிரதமர்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

japan pm

 

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினார். யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

 

கரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் பெரும்பாலான ஜப்பான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் யோஷிஹிதே சுகா, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள தனது கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

யோஷிஹிதே சுகா தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். ஜப்பானில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சி ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. எனவே அக்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக தேர்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடாதது மூலம் யோஷிஹிதே சுகா பிரதமர் பதவியைத் துறப்பதாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The famous director ss rajamouli caught in the earthquake in Japan

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.

அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

The famous director ss rajamouli caught in the earthquake in Japan

இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். 

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.