Israeli Prime Minister announces eliminated the gaza leader

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 52,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமார் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது.

Advertisment

இந்த போர் முடிவுக்கு வந்தது என உலக மக்களும், பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் காசா மக்கள் வாழ்வா? சாவா போராட்டத்தில் இருக்கின்றனர்.

இதனிடையே, கடந்த மே 13ஆம் தேதி தங்கள் வசம் இருந்த பிணைக் கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்தது. ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. காசாவின் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 Israeli Prime Minister announces eliminated the gaza leader

Advertisment

இந்த நிலையில், மே 13ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “நாங்கள் முகமது சின்வாரை ஒழித்தோம். நாங்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தீஃப், யஹ்யா சின்வார், இப்போது முகமது சின்வார் ஆகியோரை ஒழித்துவிட்டோம்” என்று கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதலில், முன்னாள் ஹமாஸ் தலைவரும், முகமது சின்வாரின் சகோதரருமான யஹ்யா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.