
அமெரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் டி.சியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரக அலுவலகம் அருகே உள்ள கேபிடல் யூத அருங்காட்சியகத்தில் யூக நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் சிலர், அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பு அருங்காட்சியகத்திற்கு வெளியே ஒரு சந்தேக நபர் நடந்து கொண்டிருந்ததாகவும், அவர் ‘சுதந்திர பாலஸ்தீனம், சுதந்திர பாலஸ்தீனம்’ என கோஷமிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொலை சம்பவம் யூத எதிர்ப்பு கொள்கையால் தூண்டப்பட்டவை எனத் தெரிவித்தார். இது குறித்து டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘யூத எதிர்ப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலை சம்பவம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இது போன்ற விஷயம் நடந்ததற்கு வருத்தமாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலின் ஐ.நா தூதர் டேனி டானன் தெரிவித்ததாவது, ‘யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் கொடூரமான செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த குற்றச் செயலுக்குப் பொறுப்பானர்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள இஸ்ரேலின் குடிமக்கள் மற்றும் பிரதிநிதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாகச் செயல்படும்’ எனத் தெரிவித்தார்.