Skip to main content

போர் விதியை மீறி மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்!

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

The Israeli army entered the hospital In spite of international law

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (14-11-23) அல்ஷிபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி உள்ளது. மேலும், அங்குள்ள நோயாளிகள், குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்குள்ள குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் பயந்து அலறித் துடித்ததாக அவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், அங்கு பணயக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்