ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்; இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!

Israel warning on Hizbullah appoints new leader

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீதும் தொடர் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதலையும் தீவிரப்படுத்தியே வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பதவியேற்றுக்கொண்டார். இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஈரான் நாட்டின் உதவியுடன் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் செயல்படுவதால் இஸ்ரேல், ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில், ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில், லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும், இந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நயீம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்தான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கல்லண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தற்காலிக நியமனம் நீண்ட காலத்திற்கானது இல்லை’ என்று குறிப்பிட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் நயீம் காசிம் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

conflict israel lebanon
இதையும் படியுங்கள்
Subscribe