Skip to main content

உச்சக்கட்டத்தில் இஸ்ரேல் போர்- ஏர் இந்தியாவின் திடீர் அறிவிப்பு

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Israel war at peak - Air India company sudden announcement

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

 

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்து, போர் சூழல் உருவாகியுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக காசாவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு உடனே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலின் படை தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக ஹமாஸ் அமைப்பினரும்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் படைகளும் காசா பகுதியைக்  குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்